நாடாளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை

இந்திய தேர்தல் கமிஷன் தயாரிக்கும் வாக்காளர் பட்டியல் மூலம் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அரசியல் சாசன விதிகளின்படி அந்தந்த மாநில தேர்தல் கமிஷன்கள் தனியாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கின்றன. பல மாநில தேர்தல் கமிஷன்கள், வாக்காளர் பட்டியல் தயாரிக்க இந்திய தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலை பயன்படுத்திக்கொள்கின்றன.

இந்த வாக்காளர் பட்டியல் மூலம் மாநிலங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 2 வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. மேலும், ஏதாவது ஒரு வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டு போவதால், பிரச்சினையும், குழப்பமும் ஏற்படுகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் நாடாளுமன்றம், மாநில சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் ஆகிய மூன்றுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக டெல்லியில் நேற்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய தேர்தல் கமிஷன் தயாரிக்கும் வாக்காளர் பட்டியலையே உள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்தி கொள்ள மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கு தேர்தல் கமிஷன், சட்ட கமிஷன், சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை ஆதரவு தெரிவித்து உள்ளன. தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்க பிரதமர் அலுவலகம் இந்த மாத தொடக்கத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. அதில் சட்ட அமைச்சக மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர் .