பொதுத்தேர்விற்கு வராத மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும் .. அரசு தேர்வுத்துறை


சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் கடந்த 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 ஆம் வகுப்பு மொழி தேர்வுகளில் சுமார் 50ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.

எனவே அதற்கான விசாரணை நடத்தப்பட்டு விளக்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று வெளியிட்டார். அதே போன்று 11 -ம் வகுப்பு தேர்வில் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.இதையடுத்து இத்தகவலை கேட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சம் இல்லாததே வருகைப்பதிவு குறைவாக இருப்பதற்கு காரணம்.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி தேர்வு தொடங்கப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு வரும் மாணவர்களின் வருகை குறைய கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அச்சத்தில் இருக்கிறது. இதனை அடுத்து இது குறித்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை ஆசிரியர்கள் சந்தித்து கட்டாயம் ஆப்சென்ட் ஆகாமல் தேர்வுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவுறுத்தலின் படி, 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்களை பகல் 1.30 மணிக்குள் பள்ளிக்கல்வித் துறையின் ‘எமிஸ்’ இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் தேர்வுக்கு வராத மாணவர்களின் விபரங்களை, அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டி இருப்பதால் இந்த உத்தரவு வெளியாகி இருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.