பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும்

பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9 ,10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாளுக்குள் முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் 50 சதவீதத்துக்கு அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.