கோவையை சேர்ந்த முதுபெரும் எழுத்தாளர் ஞானி காலமானார்!

கோவையை அடுத்த சோமனூரில் கடந்த 1935-ம் ஆண்டு பிறந்தவர் ஞானி (வயது 86). முதுபெரும் எழுத்தாளரான இவரது இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். கடந்த சில நாட்களாக உடல்நலகுறைவால் கோவை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மரணம் அடைந்தார். இவரது மனைவி இந்திராணி ஏற்கனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு பாரி, மாதவன் என்ற மகன்கள் உள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்ற இவர், மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வந்தார். தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்சியத்தை படைத்துள்ளார் கோவை ஞானி.

28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரை தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் பணிக்காக புதுமைப்பித்தன் 'விளக்கு விருது' (1998), கனடா தமிழிலக்கிய தோட்ட 'இயல்' விருது (2010), எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத் தமிழ்பேராயம் வழங்கிய 'பரிதிமாற் கலைஞர்' விருது (2013) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கோவை ஞானி மறைவிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.