ஹத்ராத் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது; உச்சநீதிமன்றம் கருத்து

அதிர்ச்சி அளிக்கிறது... ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த 19 வயது பெண் பலாத்காரம் மற்றும் படுகொலை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.. அதை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநில அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருந்ததால் சட்டம் ஒழுங்கு காரணமாக அதிகாலையிலேயே பெண்ணின் உடலை எரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளின் பாதுகாப்பு எப்படி செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார் வழக்கறிஞரை தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் இதில் சுமூகமாக விசாரணை நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் எடுக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள், ஹத்ராஸ் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயங்கரமானது என்றும் தெரிவித்தனர்.

அதேநேரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஹத்ராஸ் சம்பவத்தை தானாக முன்வந்து விசாரிக்க உள்ள விஷயத்தில், உச்ச நீதிமன்றம் தலையிடாது. உயர்நீதிமன்ற தீர்ப்பில் தவறுகள் இருப்பின் அப்போது அதை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.