பயங்கரவாத முகாம்களை அடியோடு அழிக்கும் திறமை இந்திய விமானப்படைக்கு உண்டு; தளபதி பெருமிதம்

எல்லை பகுதியில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டால், அவற்றை அடியோடு அழிப்பதற்கான திறமை, இந்திய விமானப் படைக்கு உண்டு என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாவுரியா.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக துாண்டி விடும் முயற்சியை, பாகிஸ்தான் கைவிட வேண்டும். இந்திய மண்ணில், ஏதாவது ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதற்காக பாகிஸ்தான் கவலைப்பட வேண்டியிருக்கும்; கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.


எல்லை பகுதியில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டால், அவற்றை அடியோடு அழிப்பதற்கான திறமை, இந்திய விமானப் படைக்கு உண்டு. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை, 24 மணி நேரமும் தயாராக உள்ளது. சமீபத்தில், சீனாவின் விமானப் படை ஹெலிகாப்டர், இந்திய எல்லை அருகே அத்துமீறி பறந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதை சாதாரண விஷயமாக கருதி விட முடியாது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, அதுபற்றிய விஷயங்களை கூர்ந்து கவனித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கும் பணி, இந்த மாத இறுதிக்குள் துவங்கும்.

மேலும், 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 83 விமானங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தமும், விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டும் என, எதிர்பார்க்கிறோம். கொரோனா வைரஸ் பிரச்னையால், இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.