பல தலைமுறையை சேர்ந்த பக்தர்களின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது - யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பின் ராமர் கோவில் கட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. கொரோனா காரணமாக முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்றன.

இந்த விழாவில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. 500 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. பக்தர்களின் பிரார்த்தனை இன்று நிறைவேறியுள்ளது. பல தலைமுறையை சேர்ந்தவர்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர், அயோத்தி நகரை உலகின் சிறந்த நகராக உருவாக்குவோம் எனவும், ராமர் கோவில் கட்டும் பணிகளை ராமர் கோவில் அறக்கட்டளை இனி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.