திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி

வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி... மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தது.

இதன்மூலம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிப்பாட்டுத் தலங்கள் நவம்பர் 16 முதல் திறக்கப்படுகின்றன.

இதுபற்றி மகாராஷ்டிர அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ஒரே விதிமுறைதான். முகக் கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் திரவம் உள்ளிட்டவற்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம் என்றார்.

கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. வெள்ளிக்கிழமை புதிதாக 4,132 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர், 4,543 பேர் குணமடைந்தனர் மற்றும் 127 பேர் பலியாகினர்.