பெண்களிடம் முகநூல் மூலம் பழகி காதல் வலையில் வீழ்த்தியவர் சிக்கினார்

வசமாக சிக்கினார்... ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் முகநூல் மூலம் பழகி காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி நகைப்பணம் பறித்து வந்த ஐடி ஊழியர் ஒருவர், செல்போன் வீடியோ மூலம் கையும் களவுமாக, 6ஆவதாக திருமணம் செய்த இளம் மனைவியிடம் சிக்கியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள சந்தாநகர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் விஜய பாஸ்கர். இவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வீட்டில் ஒரு மனைவி இருக்க இந்த திருமணத்தை மறைத்து விஜயபாஸ்கர் முகநூலில் பெண் வேட்டை நடத்தியுள்ளார்.

முகநூலில் அறிமுகமாக கூடிய மென்பொருள் துறையில் பணிபுரியும் பெண்கள் தான் இவரது முதல் இலக்கு.. ஏனென்றால் அவர்கள் தான் வங்கி கணக்கில் பணமும், வீட்டில் நகையும் சேர்த்து வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களிடம் நட்பாக பழகி காதல் வலையில் வீழ்த்துவார்.

பின்னர் ஆசை வார்த்தை கூறி திருமணம் வரை அழைத்துச்சென்று, சாமர்த்தியமாக பேசி தனது இச்சையை தீர்த்துக் கொண்டு நகைப்பணத்துடன் கம்பி நீட்டி விடுவது விஜயபாஸ்கரின் வாடிக்கை என்று கூறப்படுகின்றது.

முதல் மனைவி தவிர 4 கணினி மென் பொறியாளர்களுக்கு இனிப்பான பேச்சால் அல்வா கொடுத்து நகை பணம் பறித்த இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த சவுஜன்யா என்ற பெண்ணிடம் தனது வேலையை காட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அந்த பெண் உஷாராக இருந்து விஜயபாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது கணவன் அடிக்கடி வீட்டில் இல்லாமல் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டு செல்போனில் பேசியதை பார்த்த சவுஜன்யா, அவரது செல்போனை எடுத்து பார்த்த போது அவர் சிவானி என்ற பெண்ணிற்கு வீடியோ மூலம் புதிதாக ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அடிக்கு அடி உதைக்கு உதை என கவனிப்பால் 6 பெண்களிடம் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததோடு, மனைவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார் விஜயபாஸ்கர்.

ஐ.டி மாப்பிள்ளையை அடித்துத் துவைத்த கையோடு அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஆறு பெண்களை விஜயபாஸ்கர் ஏமாற்றிப் பணம் பறித்தது வந்தது தெரிய வந்துள்ளதையடுத்து இவர் மூலம் ஏமாந்த பெண்களிடம் புகார் பெற தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.