இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவிப்பு

2 நாட்களுக்கு மழை தொடரும்... தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. ராமநாதபுரத்திற்கு அருகில் நிலைகொண்டுள்ள இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ராமநாதபுரம் வழியே கடந்து மேற்கு தென்மேற்காக நகர்ந்து தெற்கு கேரளாவை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்காமல் வலுவிழக்கும். இதனால் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 34 செமீ மழை பதிவாகியுள்ளது. புரேவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது.