உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்... சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை... உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்ட ஹென்லி அன் பார்ட்னர்ஸ் என்ற குடியேற்றம் தொடர்பான ஆலோசனை நிறுவனம், சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 227 பயண இடங்களில் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லும் அனுமதியை சிங்கப்பூர் பாஸ்போர்ட் பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவை 2-ம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. ஜப்பான் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. 4-ம் இடத்தில் பிரிட்டனும், 8-ம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் 80வது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய பாஸ்போர்ட், 57 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லும் அனுமதியை வழங்குகிறது.