உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வரத்து குறைவு

வாடிக்கையாளர்கள் வரத்து குறைவு... தமிழகத்தில் உணவகங்களை திறந்து 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்க தமிழக அரசே அனுமதி அளித்தது.

இந்த நடைமுறையின்படி நேற்று திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் உணவகங்கள் திறக்கப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் வாடிக்கையாளர்களின் வரத்து குறைந்தே உள்ளது.

தமிழக அரசு 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறினாலும், வெறும் 20 சதவீத வாடிக்கையாளர்கள்தான் வருவதாக உணவகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

உணவகங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாததும், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அனுமதிப்பது, இருக்கைகள் குறைத்திருப்பது, கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் போன்றவைதான் வாடிக்கையாளர்களின் வரத்துக் குறைவாக இருப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

சில உணவகங்கள் போதுமான வாடிக்கையாளர்கள் வராததால், சமைத்த உணவை பார்சல்களாகக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்த்ததை விடவும் குறைவான லாபமே கிடைத்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

குறைவான ஊழியர்களே இருப்பதால், குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே சமைக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக ஏழு மணி வரை மட்டுமே உணவகங்களை திறந்திருக்க வேண்டும் என்று அரசு கூறுவதால், அதிக வாடிக்கையாளர்கள் வரும் நேரத்தில் உணவகங்களை மூடும் நிலை நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது என்றும் உணவக உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

அதனால் இரவு உணவை உணவகத்துக்கு வந்து சாப்பிட முடியாத நிலையில்தான் பொதுமக்கள் உள்ளனர். மேலும், பொதுவாக தமிழகத்தில் உணவங்களுக்கு கூட்டம் அதிகமாக வரும் நேரம் என்பது இரவு 8 மணி முதல்தான். ஆனால் ஏழு மணிக்கே உணவகங்களை மூடுவதால் லாபம் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.