ஒடிசாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது

ஒடிசாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 718 பேருக்கு புதிதாகத் தொற்று பாதித்துள்ள நிலையில், மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 16,110 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கஞ்சம் மாவட்டத்திலிருந்து இரண்டு உயிரிழப்புகள், கஜாபதி மற்றும் அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த தலா ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 83 பேர் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது

நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 25 பேர் தனியார் மருத்துவமனையிலும் 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.