ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.42 லட்சமாக அதிகரிப்பு

ரஷ்யாவில் நேற்று (மே 13) 10,029 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,42,271 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக 11வது நாளாக ரஷ்யாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அமெரிக்கா, ஸ்பெயினுக்கு அடுத்ததாக அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

அங்கு இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,212 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இறப்பு விகிதம் குறைவு ஏன்?ரஷ்யாவில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த போதிலும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 'ரஷ்யாவிடம் கொரோனா தொற்று இறப்பு குறித்து பேசி வருகிறோம். உலகளவில் கொரோனா இறப்பு விகித சராசரியை விட குறைவாக ரஷ்யாவில் இறப்பு விகிதம் 0.9 சதவீதமாக உள்ளது.


அதிகமாக கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் ரஷ்யாவில் மிகவும் குறைவாக உள்ளது' என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் மத்தியில் உலக சுகாதார நிறுவனம், அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை பதிவு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியது.

ரஷ்யாவை பொறுத்தவரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கல்லீரல் அல்லது இதய செயலிழப்பு போன்ற பிற நிலைமைகளால் இறப்பதை சேர்த்து கணக்கிடப்படும்போது இறப்புகள் மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யாவின் துணை பிரதமர் டாட்டியானா கோலிகோவா, 'நாங்கள் ஒருபோதும் அதிகாரபூர்வ தகவல்களை நேர்மையற்ற முறையில் கையாள்வதில்லை' என தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கபப்ட்ட நாடுகளில் ரஷ்யாவில் மட்டுமே இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இறப்பு விகிதம் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரையும், அமெரிக்காவில் 6 சதவீதமும், ஜெர்மனியில் 4.4 சதவீதமும், உலகளவில் இறப்பு விகிதம் 6.8 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.