பாகிஸ்தானில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனா பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் வெற்றி அடையாததால், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 4,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, பாக்.,கில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1 லட்சத்து, 3,671 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 2,067 ஆக உயர்ந்துள்ளது. 34 ஆயிரத்து, 355 பேர் சிகிச்சைக்குப் பின், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 7 லட்சத்து, 5,833 பேருக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், முஸ்லிம் லீக் கட்சித் தலைவருமான ஷாஹித் கக்கான் அப்பாசிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.