பிச்சையெடுத்து சேமித்த பணத்தை கோயிலுக்கு வழங்கிய மூதாட்டி

புல்பானி: பிச்சையெடுத்து சேமித்த பணத்தை புல்பானி நகரில் உள்ள ஜெகன்னாதர் கோயிலுக்கு வழங்கி உள்ளார் மூதாட்டி ஒருவர்.

ஒடிசா மாநிலம் புல்பானியை சேர்ந்தவர் மூதாட்டி துலா பெஹரா (70). இவரது கணவர் பிரபுல்லா பெஹரா. மாற்றுத்திறனாளியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஆரம்பத்தில் புல்பானி நகரில் வீடு வீடாக யாசகம் செய்து வந்த அவர், கணவர் இறந்த பிறகு புல்பானி நகரில் உள்ள ஜெகன்னாதர் கோயில், சாயி கோயில் மற்றும் பிற கோயில்களின் வாசலில் அமர்ந்து யாசகம் கேட்பார்.

கந்தமால் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். கோவில்களில் யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். ஜகந்நாதரின் தீவிர பக்தரான துலா பெஹரா, ஜெகநாதர் கோயிலுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை கொண்டிருந்தார்.

இதற்காக தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி யாசகா மூலம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்துள்ளார். இவரது சேமிப்பு கணக்கில் இருந்த பணம் சமீபத்தில் ரூ.1 லட்சத்தை எட்டியதாக தபால் ஊழியர்கள் பதிவு செய்தனர். பின்னர் துலா பெஹெரா அந்த பணத்தை புல்பானி ஜெகநாதர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தார்.
தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினர் நன்கொடையாக சங்கராந்தி தினமான கடந்த வெள்ளிக்கிழமை துலா பெஹராவிலிருந்து 1 லட்சம் ரூபாயை வழங்கினார். இதுகுறித்து ஜெகநாதர் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் சுனாசிர் மொகந்தி கூறுகையில், “துலா பெஹரா வழங்கும் நன்கொடை கோயிலின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
அவரது பங்களிப்பை பாராட்டி, துலா பெஹராவுக்கு வாழ்நாள் மானியம் வழங்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.