மிக உயரமான கட்டிடத்தில் ஏறி சாதனைப்படைத்த முதியவர்

பிரான்ஸ்: உயரமான கட்டிடத்தில் ஏறி சாதனை... பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயது நபர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், மிக உயரமான கட்டடத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.


விளையாட்டில் ஆர்வம் இருந்தால், வயது முதிர்வு ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலாய்ன் ராபர்ட். இவர் பல்வேறு கட்டங்களில் ஏறி முக்கியப் பிரச்னைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனால் இவர் ''பிரான்ஸ் ஸ்பைடர் மேன்'' என அழைக்கப்படுகிறார்.


இவர் நேற்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள 613 அடி (187 மீட்டர்) உயர வணிக வளாக கட்டடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஏறி சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, 60 வயதாகிவிட்டது என்பது எந்த வகையிலும் தடையல்ல. விளையாட்டில் உங்களுக்கு முழு ஈடுபாடு இருந்தால் நீங்கள் தொடர்ந்து வீரராக செயல்படலாம். உற்சாகமாக இருங்கள். அற்புதங்களை செய்யலாம்.


60 வயதை நெருங்கும்போது ஏற்கெனவே நான் ஏறிய கட்டடத்தில் ஏதேனும் ஒன்றில் மீண்டும் ஏற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நானே சத்தியம் செய்துகொண்டேன். அதனை தற்போது நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.


அலாய்ன் ராபர்ட் கடந்த 1975ஆம் ஆண்டு கட்டடங்கள் மீறு ஏறுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் அவர் கட்டடங்கள் மீது தனியொரு நபராக ஏறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.