11,12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்; தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள்ளனது. இந்நிலையில் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு அளிப்பது என்பது குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையை மொத்தமாக மாற்றப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தது. புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை இடம்பிடித்திருந்தது.

பழைய முறையில் 6 பிரிவுகளில் இருந்த கணிதப்பாடம் புதிய பாடத்தொகுப்பில் 2 பிரிவுகளில் மட்டுமே
இடம்பிடித்திருந்தது.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு கணினி பயன்பாடு பாடம் நீக்கபட்டது. வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்புகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் உயர்க்கல்வி படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் அதிகளவில் சிக்கல் ஏற்படும் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பின.

இதனையடுத்து 11,12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.