அடுத்தாண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி உறுதியாக நடக்கும்

கண்டிப்பாக நடக்கும்... கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு கோடையில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடம் ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூடியது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 2021இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு கோடையில், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான் உறுதியாக உள்ளது, இது மனிதகுலம் தொற்றுநோயை தோற்கடித்தது என்பதற்கான சான்றாக அமையும். என்று சுகா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமரின் இந்த அறிவிப்பு ஒலிம்பிக் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.