குழந்தை மாஸ்க் அணியதாதால் அனைத்து பயணிகளையும் இறக்கி விட்ட விமானி

கல்கரியில் விமானத்தில் பயணி ஒருவரின் 19 மாத குழந்தை மாஸ்க் அணியததால், விமானி பயணிகள் அனைவரையும் இறக்கி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கல்கரியிலிருந்து ரொரன்றோ புறப்பட்ட விமானம் ஒன்றில் சஃப்வான் சவுத்ரி என்பவர் தன் மனைவி மற்றும் 19 மாதக்குழந்தை
ஜாரா, ஸுப்தா (3) ஆகியோருடன் ஏறி அமர்ந்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரம் இருக்கும் நிலையில், விமான ஊழியர்கள் வந்து அவர்களது 19 மாதக் குழந்தை மாஸ்க் அணியாமல் இருப்பதைக் கண்டதும், பயணிகள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும், இல்லையென்றால் விமானம் புறப்படாது என்று கூறியிருக்கிறார்.

கனடா சட்டப்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணியத் தேவையில்லை. இருந்தாலும் மாஸ்க் ஒன்றை எடுத்து குழந்தைக்கு அணிவித்துள்ளார் சஃப்வான் சவுத்ரி. ஆனால், மாஸ்க் அணிந்து பழக்கமில்லாத குழந்தை அழுது அடம்பிடித்ததோடு வாந்தி எடுத்துள்ளது. உடனே பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை அழுவதையும், அதன் பெற்றோரிடம் பொலிசார் வாக்குவாதம் செய்வதையும் கண்ட சக பயணிகள் கோபக்குரல் எழுப்பியுள்ளனர். சிறிது நேரத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக விமான பயணிகள் அனைவரும் வெளியேற்றப்படுவதாக விமானி அறிவித்துள்ளார்.

நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மரியன் நூர் என்னும் பெண், சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். உடனே, வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறிய விமான பணியாளர் ஒருவர், பொலிசாரை அழைத்து அந்த பெண் வீடியோ எடுப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அது எங்கள் வேலையில்லை என பொலிசார் மறுத்துள்ளனர்.

இதற்கிடையில், விமானம் ரத்து செய்யப்பட்டபின், இதுவரை விமான நிறுவனம் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் சஃப்வான் சவுத்ரி.