இந்திய கால்பந்து வீராங்கனைகளின் அவல நிலை; உணவின்றி தவித்துள்ளனர்

ஊரடங்கால் சத்தான உணவுகள் உட்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளனர் கால்பந்து வீராங்கனைகள் என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் ஜூனியர் கால்பந்து வீராங்கனைகள் உணவில்லாமல் அவதிப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்திய மண்ணில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க இருந்தது. இதற்காக இந்திய வீராங்கனைகள் கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட, அனைவரும் வீடுகளுக்கு திரும்பினர். உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டுக்கு (பிப்., 17-மார்ச் 7) மாற்றப்பட்டது.

இந்திய உத்தேச அணியில் இடம் பெற்ற 24 பேரில், 8 பேர் ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள். இதில் தேசிய சாம்பியன்ஷிப்பில் 17 கோல் அடித்து அசத்தியவர் சுமதி குமாரி.

இவர் ராஞ்சியில் இருந்து 110 கி.மீ., துாரத்தில் உள்ள கும்லா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் உணவுக்கு சிரமப்பட்டு வந்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்த அரிசியை வைத்து சமாளித்துள்ளார். சமீபத்தில் ரேஷனில் பெற்ற 50 கிலோ அரிசி, பருப்பு தான் தற்போது இவரது குடும்பத்தின் பசியை போக்கியுள்ளது.

பயிற்சி முகாமில், பால், முட்டை, வாழைப்பழம், சிக்கன், மட்டன், மீன் என சாப்பிட்ட இவர், தற்போது ஆரோக்கிய உணவு பொருட்களை பார்க்க கூட முடியவில்லை. உதவி பயிற்சியாளர் தந்த ரூ. 5,000 போதவில்லை. இதனால் அணிக்கு தேர்வு பெற முடியுமா என சந்தேகத்தில் உள்ளார்.

இதே நிலைதான் மற்றொரு வீராங்கனையான சுதா அங்கிதாவும் நிகழ்ந்துள்ளது. அப்பா இல்லாத இவர், கிராமத்தினர் தரும் அரிசி மற்றும் பிற பொருட்களை வைத்து தான் சாப்பிட்டு வந்துள்ளார். வீட்டு வேலை பார்க்கும் இவரது அம்மா, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த போதும், கிடைக்கவில்லை. ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசி கிடைத்தது. பின் மே 26ல் பத்திரிகை செய்தியை பார்த்து, மாநில முதல்வர் உத்தரவிட்டதும், சுதா வீட்டுக்கு ரேஷன் வழங்கினர்.

இதேபோல பூர்ணிமா குமாரி, ஆஷ்தம், அமிஷா என பலரும் உணவுக்கு சிரமப்பட்டுள்ளனர். இதை உணர்ந்த இந்திய கால்பந்து சங்கம், ஜூனியர் வீராங்கனைகள் உணவு செலவுக்காக மாதம் ரூ. 10,000 வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டின் பெருமையை உயர்த்த தங்களின் இன்னல்களை மறைத்து, மறந்து போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளின் வறுமையை போக்குவது அரசின் முக்கிய கடமையாகும்.