ஆறு காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டது

கொரோனா பரவலால் காவல் நிலையம் மூடப்பட்டது... மணப்பாறை காவல்நிலையத்தில் பணிபுரியும் 6 காவலர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து காவல்நிலையம் மூடப்பட்டது.

காவல்நிலையம், தற்காலிகமாக விராலிமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. காவலர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் வகையில் வெற்றிலை, சீரகம், மிளகு, முட்டை, கடலைமிட்டாய், சுக்குமல்லி காபி பவுடர் ஆகியற்றை டி.எஸ்.பி வழங்கினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் தொற்று ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர், ஊராட்சி ஒன்றிய உதவி வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், தனியார் வங்கி ஊழியர், அரசு வங்கி மேலாளர், என முக்கிய நபர்கள் தொடர்ந்து தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மணப்பாறை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் 7 ஏழு காவல் நிலையங்களில் 5 பெண் காவலர்கள் உள்ளிட்ட 11 காவலர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணப்பாறை காவல்நிலையத்தில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்நிலையம் வியாழக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது. தஸ்தாவேஜ்களுடன் காவல்நிலையம், தற்காலிகமாக விராலிமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. புகார்களை அளிக்க வரும் பொதுமக்கள் கூட்டமாக காவல்நிலையத்திற்கு வரவேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் காவலர்கள் தொற்று ஏற்படாத வகையில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், புகார்களை காவல்நிலையங்களில் வைத்து விசாரணை செய்யாமல் சம்பவ இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்ளும்போது சமூக தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து காவலர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் வகையில் வெற்றிலை, சீரகம், மிளகு, முட்டை, கடலைமிட்டாய், சுக்குமல்லி காபி பவுடர் ஆகியற்றை டி.எஸ்.பி வழங்கினார்.