நியூசிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்ததால் ஊரடங்கை நீட்டித்த பிரதமர்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.

கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பரவ ஆரம்பித்தவுடனே தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என கடந்த ஏப்ரலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தற்போது 102 நாட்களுக்கு பின், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மீண்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மேலும், ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது நியூசிலாந்தில் 12 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,251 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஆர்டன் கூறுகையில், கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை தொடர்ந்து வருகிறது. எனினும் அதுபற்றி இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. பாதிக்கப்பட்ட 29 பேரும் ஆக்லாந்தில் இருந்து தொற்றுக்கு ஆளானவர்கள். கொரோனா பாதிப்பு குறைவதற்கு முன் அது அதிகரிக்கும். இதனால் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 12 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இந்த 12 நாட்களுக்குள் கொரோனா பாதிப்புடைய முக்கிய நபர் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார் என்று கூறியுள்ளார்.