தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

இந்தியா: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.இதையடுத்து எம்.பி.,க்களை பல்வேறு குழுக்களாக பிரித்து இன்று முதல் 10-ம் தேதி வரை ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டு உள்ளார். டெல்லியில் இன்று மாலை 6.30மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 42 எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று இரவு 7:30 மணிக்கு மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 41 எம்.பி.க்கள் பங்கேற்கும் நிலையில், இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில எம்.பி.க்களுடன் நாளை மறுதினம் ஆலோசனை நடத்தும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.