பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என எதிர்பார்ப்பு

சென்னை: பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளும் தற்போது மொத்த கொள்ளளவில் 92 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை – தெஹரை கண்டிகை ஏரிகள் உள்ளன. கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் முழு நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது.

இந்த ஏரியின் உயரம் 35 அடி. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 35 அடியாக பதிவானது. முழு கொள்ளளவான 3.231 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 480 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருந்தது. இடைவிடாது பெய்த மழையால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10,000 கன மீட்டர் உபரி நீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கனஅடியும், மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் தொடர்ந்து விடுவிக்கப்படுகின்றன.செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 24 அடியை நெருங்கியுள்ளது. ஏரியின் மொத்த உயரம் 28.80 அடி. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் 19.80 அடி தண்ணீர் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் வரும் நாட்களில் பூண்டியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.


எனவே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளும் தற்போது மொத்த கொள்ளளவில் 92 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.