பாலைவன பயணம் நிறைவு நாளில் ஒட்டக குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த துபாய் ஆட்சியாளர்

அமீரகத்தின் 49-வது தேசிய தினத்தையொட்டி, கடந்த மாதம் 29-ந் தேதி துபாய் ஹம்தான் பின் முகம்மது பாரம்பரிய மையத்தின் சார்பில் பாலைவன ஒட்டக சாகச பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சாகச பயணத்தில் அமீரகம், செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த 8 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் பங்கேற்றனர்.

முன்னதாக இவர்கள் அனைவருக்கும் பாலைவன ஒட்டக பயணத்திற்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் அளிக்கப்பட்டது. பின்னர், அபுதாபியில் இருந்து கடந்த மாதம் 29-ந் தேதி மேற்கு பகுதியில் உள்ள லிவா பாலைவனத்தில் இருந்து ஒட்டக சாகச பயணம் தொடங்கியது. மொத்தம் 550 கி.மீ. தொலைவை பாலைவனம் வழியாக இந்த குழுவினர் கடந்து நேற்று முன்தினம் துபாய் குளோபல் வில்லேஜ் பகுதியில் உள்ள பாரம்பரிய கிராமத்தை அடைந்தனர்.

அவர்கள் குளோபல் வில்லேஜ் பகுதியை அடையும் முன் சாலையில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த வழியாக துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் காரில் வந்து கொண்டு இருந்தார். இதில் அந்த சாலையோரமாக ஒட்டகத்தில் சென்று கொண்டு இருந்தவர்களை பார்த்து வாகனத்தை நிறுத்தினார்.

முதலில் ஆட்சியாளரை பார்த்ததும் அந்த குழுவினர் மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தனர். பின்னர், அந்த குழுவினரை வழிநடத்தி செல்லும் அமீரகத்தை சேர்ந்தவர் பாலைவன பயணத்தை குறித்து ஆட்சியாளரிடம் விளக்கமளித்தார். அவர்களுடன் உரையாற்றிய ஆட்சியாளர் வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகளை கூறி சென்றார்.