சிறு குழந்தைகளும் பெரியவர்களைப் போலவே கொரோனாவை பரப்பும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் தகவல்

கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் கொரோனா குறித்து ஒரு ஆய்வு நடத்தி வந்தனர். இதில் கொரோனா வைரஸ் தொற்றை பெரியவர்கள் போலவே சிறுகுழந்தைகளும் பரப்புவதற்கான சாத்தியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், குழந்தை தொற்று நோய் நிபுணருமான டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் இதுகுறித்து கூறுகையில், கொரோனா பெரியவர்களிடம் காணப்படுவதை விட குழந்தைகளால் வைரஸ் அதிகமாக பரவலாம் என்று ஆய்வு காட்டுகிறது. இது முக்கியமான பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களின்போது கவனிக்கப்பட வேண்டியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

சிறு குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினை பொதுமக்களிடையே பரப்புவதில் முக்கியமானவர்களாக உள்ளனர். குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றை கொண்டிருக்கிறபோது, தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.