பேசும் பொருளாக மாறிய தாய்லாந்து போராட்டம்

தாய்லாந்து போராட்டம் பேசும் பொருளாகி விட்டது... ரஷியா, ஹாங்காங், இந்தோனேஷியா, நெதர்லாந்து என பல்வேறு நாடுகளிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தாய்லாந்து போராட்டம் மிகப்பெரும் அளவில் பேசும் பொருளாகிவிட்டது, அப்படி என்ன தான் நடக்குது தாய்லாந்தில்?

தாய்லாந்து நாட்டில் அந்நாட்டு பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராணுவ தளபதியான இவர் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றி பெற்றாலும் 2014 ஆம் ஆண்டிலேயே கலகம் மூலம் ஆட்சியை அவர் பிடித்ததால் அவருக்கு எதிரான அதிருப்தி அலை தொடர்ந்து அந்நாட்டில் வீசி வருகிறது.

போராட்டம் இதன் அடிப்படையாக இருந்தாலும் இம்முறை வெளிநாட்டிலேயே வாழ்க்கையை கழிக்கும் மன்னரை எதிர்த்து போராடி வருகின்றனர். தாய்லாந்தில் முடியாட்சிக்கு எதிராக பேசுவதும் விமர்சிப்பதும் கடும் குற்றமாக கருதப்பட்டு நீண்ட கால சிறை தண்டனைக்கும் வழிவகுக்கும்.

இருந்த போதிலும் மன்னராட்சியில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அரசுக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்த 20க்கும் அதிகமான தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதால், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பாங்காக்கில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக, வியாழக்கிழமை காலை முதல் 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதித்து அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதிகாலையிலேயே இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அவசர நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் அரசு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது #Whatshappeninginthailand என்னும் ஹாஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.