பாஜ தொண்டர்கள் மீது ரசாயனம் கலந்து தண்ணீரை அடித்ததாக மத்திய அமைச்சர் புகார்

ரசாயனம் கலந்ததாக புகார்... மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் போராட்டம் நடத்திய பாஜக தொண்டர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியபோது ரசாயனத்தையும் கலந்து பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புகார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து அரசியல் ரீதியாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஆளும் திரிணாமூல் காங்கிரஸார் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கொல்லப்படுவதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் இன்று மாநிலம் தழுவிய 'நபன்னா சாலோ' என்னும் போராட்டத்தை நடத்தினர். கொல்கத்தா தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

போராட்டத்தினரை தடுக்கும் விதமாக போலீசார் தடுப்பு அமைத்திருந்தனர். தடுப்பையும் மீறி போராட்டத்தினர் செல்ல முற்பட்டனர். பேரணிக்கு திட்டமிடப்பட்ட சாலைகள், தெருக்கள் அடைக்கப்பட்டன. தடையை மீறி பேரணி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பை மீறி பாஜகவினர் முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீஸாரின் நடவடிக்கைக்கு பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீஸ் நடவடிக்கையை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.