100 ஆண்டுகளுக்கு முன் மரணித்தவர் முகத்தில் இன்றும் சிரிப்புடன் காணப்படுவதாக வைரலாகும் புகைப்படம்

தற்போது சமூக வலைதளங்களில் 100 ஆண்டுகளுக்கு முன் மரணித்த துறவியின் முகம் இன்றும் புன்னகையுடன் காணப்படுவதாக கூறி ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பதிவில், இந்த துறவி மங்கோலியாவை சேர்ந்தவர், இவர் இன்று வரை மரணிக்கவில்லை, மாறாக ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் என வைரல் பதிவுகளில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த தகவல் அடங்கிய புகைப்படம் ட்விட்டரிலும் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. துறவியின் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் புகைப்படத்தில் இருப்பது லுயங் போர் பிளான் எனும் புத்த மத துறவி என கண்டறியப்பட்டுள்ளது.

லுயங் போர் பிளான் எனும் புத்த மத துறவி உடல்நலக் குறைவால் நவம்பர் 2017-இல் உயிரிழந்தார். தாய்லாந்தின் பாங்காங் மருத்துவமனையில் இவரது உயிர் பிரிந்தது. பின் இரண்டு மாதங்களுக்கு பின் இவரது உடல் மீண்டும் எடுக்கப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. இது புத்த மதத்தின் பாரம்பரிய வழக்கம் ஆகும்.

பல்வேறு வலைதளங்களில் இது பற்றிய தகவல்கள் அடங்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வைரல் புகைப்படத்தில் இருக்கும் துறவி 100 ஆண்டுகளுக்கு முன் மரணிக்கவில்லை என்பதும், இவர் மங்கோலியாவில் மரணிக்கவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.