ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சற்றே அதிகரித்துள்ளது. கனமழை எதிரொலியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று (அக்.9) விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி என்ற அளவுக்கு நீர்வரத்து உயர்ந்தது. அதற்கு முன்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் கீழாக நீர்வரத்து சரிந்தது.

இந்நிலையில், ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், காவிரியாறு தமிழகத்தை நோக்கி வரும் வழியில் அமைந்துள்ள வனப்பகுதிகளிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. இந்த மழை நீர் முழுக்க காவிரியாற்றில் சேரத் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று இரவும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஆற்றில் மேலும் அதிக அளவில் தண்ணீர் சேரத் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் இன்று (அக்.10) காலை முதலே விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி என்ற நிலைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வனப்பகுதிகளில் இருந்து ஆற்றில் சேர்ந்த தண்ணீர் என்பதால் ஒகேனக்கல்லில் தற்போது கலங்கிய நிலையில் செந்நிறத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.