வளரும் நாடுகளுக்கு ஆதரவு இருந்தால் முழு உலகமும் வேகமாக முன்னேற முடியும் - பிரதமர் மோடி

இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இணைந்து ‘ஜி-20’ என்ற அமைப்பாக செயல்படுகின்றன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு சவுதி அரேபிய மன்னர் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டார். நேற்று, ‘கிரகத்தை பாதுகாத்தல்’ என்பது குறித்து ஒரு நிகழ்வு நடைபெற்றதில் பிரதமர் மோடி பேசுகையில், இன்றைக்கு உலகளாவிய பெருந்தொற்று நோயின் விளைவுகளில் இருந்து நமது மக்களையும், பொருளாதாரங்களையும் காப்பதில் நாம் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவதில் நாம் கவனத்தை செலுத்துவதும் சம அளவு முக்கியமானது. பருவநிலை மாற்றத்தை ஒருங்கிணைந்த, விரிவான, முழுமையான வழியில் நாம் போராட வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், இந்தியா, பாரீஸ் ஒப்பந்த இலக்கு களை சந்திப்பது மட்டுமின்றி, அவற்றையும் தாண்டி இருக்கிறது என்பதை பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதில், பல பகுதிகளில் இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாங்கள் எல்.இ.டி. பல்புகளை பிரபலப்படுத்தி இருக்கிறோம். இது ஆண்டுக்கு 3 கோடியே 80 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை சேமிக்கிறது. உஜ்வாலா என்னும் எங்கள் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின்கீழ் 8 கோடி வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்கி புகையில்லா சமையலறைகளை உருவாக்கி உள்ளோம் என்று கூறினார்.

மெட்ரோ ரெயில் திட்டம், நீர்வழிப்பாதைகள் மற்றும் பல அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்தியை உருவாக்கிட இலக்கு வைத்துள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்தியை உருவாக்கவும் நாங்கள் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கிறோம். வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றின் அதிக ஆதரவு இருந்தால் முழு உலகமும் வேகமாக முன்னேற முடியும். உழைப்பை உற்பத்தியின் ஒரு அம்சமாக மட்டுமே பார்க்காமல், ஒவ்வொரு தொழிலாளியின் கண்ணியத்திலும் கவனம்செலுத்த வேண்டும் என்று கூறினார்.