தியேட்டர்கள் திறப்பு பற்றி முடிவு எடுக்கவில்லை; மத்திய அரசு தகவல்

தியேட்டர்கள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் முடங்கின.

ஆனால் இப்போது அளிக்கப்பட்ட தளர்வுகள் அடிப்பைடையில் போக்குவரத்து, மால், கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா படப்பிடிப்புகள் நடத்தவும் அனுமதி கிடைத்தது.

இந்நிலையில், வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளது.

தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். சினிமா என்பது நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகவும், பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும் உள்ளது. எனவே, திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்தது.

மேலும், பல்வேறு சினிமா துறையினரும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தியேட்டர் திறப்பு குறித்து முடிவு எடுக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.