20வது திருத்த வரைபில் புதிய விதிகள் எதுவும் இல்லை; சட்டமா அதிபர் தகவல்

புதிய விதிகள் எதுவும் இல்லை... 20வது திருத்த வரைபில் புதிய விதிகள் எதுவும் இல்லை என்றும் அதில் 1978 அரசியலமைப்பு மற்றும் அதன் 17 மற்றும் 18 வது திருத்தங்களில் உள்ள பெரும்பாலான உட்பிரிவுகள் காணப்படுவதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

19 வது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நீக்கப்பட்ட உட்பிரிவுகள் மீண்டும் 20 ஆவது திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

20 வது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது அவர் இந்த சமர்ப்பிப்புகளை முன்வைத்தார்.

மனுக்களின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சட்டமா அதிபர், அந்த விதிமுறைகளில் பெரும்பாலானவை கடந்த காலங்களில் உயர் நீதிமன்றத்தால் விரிவாக ஆராயப்பட்டதாகவும் ஆகவே முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தமும் அந்த தீர்மானங்களுக்குக் கட்டுப்படுவதால் அந்த விதிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து எந்த கேள்வியும் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு மனுதாரர்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகிறார்கள் என்றும் அதேசமயம் அவை 1978 அரசியலமைப்பு மற்றும் கடந்த திருத்தங்களில் வேறு எங்கும் காணப்படலாம் என்ற அடிப்படையில் பல கருதுகோள்கள் மற்றும் பல்வேறு கூற்றுக்களின் இணைப்புகளைக் கொண்டு வந்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார்.

சுமார் 12 தலையீட்டு மனுதாரர்களுடன் இந்த 20 ஆவது திருத்த சட்டமூலத்தை வரைபினை எதிர்த்து 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான சமர்ப்பிப்பு அனைத்தும் நேற்றைக்குள் முடிவடையவிருந்தாலும், மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைக்க சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை அவர் மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.