பொதுக்குழுவை கூட்டியதில் தவறில்லை... நீதிபதிகள் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

சென்னை: ஜூலை11ல் அ.தி.மு.க.,. பொதுக்குழுவை தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு பிறப்பித்த 128 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இருவரும் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரையும் சேர்ந்து கூட்டத்தை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதா என்பது பிரதான வழக்கில் தான் முடிவு எடுக்க முடியும்.

இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு கட்சி செயல்பாட்டை முடக்கிவிடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பழனிசாமி விட்டுக்கொடுத்தார். ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்காத நிலையில் 23க்கு முந்தையே நிலை தொடர வேண்டும் என எப்படி உத்தரவிட முடியும்.

ஜூலை 11 பொதுக்குழுவை தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை. உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது. ஜூலை 11 பொதுக்குழுவை ஜூன் 23ல் அறிவித்ததை முறையான நோட்டீசாக எடுத்து கொள்ள வேண்டும். பன்னீர்செல்வம், பழனிசாமி சேர்ந்து செயல்படுங்கள் என தனி நீதிபதி உத்தரவிட்டது தவறு. அதிமுக விதிகளின்படி பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் பெற்றது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.