கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காயல்பட்டினம், வைப்பாறு, சூரங்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 25 மி.மீ. மழை பெய்தது.

மழை காரணமாக மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. டூவிபுரம், பிரையண்ட்நகர் உள்ளிட்ட சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் ஏற்கனவே நிரம்பியதால் உப்பாற்று ஓடையில் வந்த தண்ணீர் மதகுகள் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.

இதனால் உப்பாற்று ஓடையின் கரையில் உடைப்பு ஏற்பட்டு அத்திமரப்பட்டியில் வாழைத்தோட்டத்தில் தண்ணீர் புகுந்தது. கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் கடந்த பெய்த கனமழையின் காரணமாக பட்டவர்த்தி குளத்தின் கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி, தோட்டத்து பயிர்களை சூழ்ந்தது.


இந்நிலையில் இன்று காலை 6.00 மணி முதல் 7.30 வரை மாநகரில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மின்மோட்டார் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் அகற்றினர்.

இந்நிலையில் இன்று காலை பெய்த மழையால் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக ஸ்டேட் பாங்க் காலனி, திரு.வி.க. நகர், தபால்தந்தி காலனி, லூர்தம்மாள்புரம், வெற்றிவேல்புரம், சாமு வேல்புரம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகர சாலைகளில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.