இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க.. மின் வாரியத் தலைவர் உத்தரவு

சென்னை: நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் ...இது தொடர்பாக துறை சார் உயரதிகாரிகள் கூறியதாவது: வருவாய் இழப்பைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சில அறிவுறுத்தல்களை மின் வாரியத் தலைவர் வழங்கியுள்ளார். எனவே அதன்படி, அனைத்து குடிசை இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இதையடுத்து குடிசைக்காக மின் இணைப்பு பெற்று வீடு கட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரை 1 ஏ விலைப் பட்டியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான மீட்டர்களை உடனுக்குடன் மாற்றியமைக்க வேண்டும். பீடர்களில் மின்சாரத்தின் நிலை பற்றி அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.


அதிகளவு மின் இழப்பை ஏற்படுத்தும் பீடர்கள் பற்றி அறிக்கை தயாரிக்க வேண்டும். அதன்படி மின் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்வாரிய அலுவலகங்களின் மின் பயன்பாட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும். இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவையை விரைந்து செலுத்த வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

இதனை அடுத்து இது போன்று வருவாய் இழப்புக்கான முக்கிய காரணிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வை பொறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.