ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

தமிழகம்: ஒகேனக்கல் தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (வழி NH7) கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம், பாளையம்பட்டி , ராசிமணல், கம்மாக்கரை, பிலிகுண்டுலு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் , காகர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான உன்சான அள்ளி, தெப்ப குளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளான பிரதான அருவி ,சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் மழையின் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அடிக்கடி உயர்ந்து வருகிறது.
இதனால் வார விடுமுறை நாட்களில் ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணிக்க முடியாமலும் , அருவியில் குளிக்க முடியாமலும் ஏமார்ந்து திரும்பி செல்கின்றனர்.