ஜம்மு காஷ்மீரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடி கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்நிலையிலும் கூட இந்திய எல்லையில் வீரர்கள் போராடி வருகின்றனர். அத்துமீறி தாக்குதல், எல்லை பகுதியில் நுழைதல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டம், நிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கு நடத்திய தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிசூட்டு எதிராக பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்த என்கவுண்டரில், 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.