நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தையும் இழந்த்து உத்தவ் தாக்கரே அணி

புதுடில்லி: நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணியிடம் உத்தவ் தாக்கரே அணி இழந்து விட்டது. இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மறைந்த தலைவர் பால் தாக்கரே 1966-ம் ஆண்டு தொடங்கிய சிவசேனா கட்சி, மராட்டிய அரசியலில் பிரிக்க முடியாத சக்தியாக விளங்கியது. அவரது மறைவுக்குப் பின் அவரது மகன் உத்தவ் தாக்கரேயால் வழிநடத்தப்பட்டு வந்த நிலையில், அந்தக் கட்சியில் பிளவு உருவானது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.க்களுடன் பிரிந்து உத்தவ் தாக்கரேயின் ஆட்சியைக் கவிழ்த்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் பா.ஜ.க.வுடன் கை கோர்த்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டேயினுடையதுதான் உண்மையான சிவசேனா கட்சி என்று கடந்த வாரம் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அத்துடன் சிவசேனாவின் வில்-அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்டது.

இது உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்தல் கமிஷனின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு அங்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகம் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி மக்களவை செயலகத்துக்கு, மக்களவை ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எம்.பி. கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற செயலகம் ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்ற சிவசேனா கட்சி அலுவலகத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி உள்ளது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் இழப்பாகும்.