உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இரண்டாவது முறையும் கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயினால் உலகத் தலைவர்களும், மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிபர் விளாடிமிருக்கு 42 வயதாகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு கீவ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது, 2-வது முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே ‘டெலகிராம்’ சமூக வலைத்தளத்தில் நேற்று உறுதி செய்தார்.

அதே நேரத்தில் அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது பலம் திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, குணமாகியது குறிப்பிடத்தக்கது.