உடல்நலக்குறைவால் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

உடல் நலக்குறைவால் லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) காலமானார்.

ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அவர் காலமானார். இதனை அவரது மகன் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் ''அப்பா நீங்கள் தற்போது இந்த உலகத்தில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போது எல்லாம் நீங்கள் என்னுடன் இருந்து இருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன்.'' என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் தனது தந்தையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், ஐக்கிய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தேர்தலில் எல்ஜேபி தனித்து போட்டியிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு பதில் அவரது மகன் சிராக் பாஸ்வான் அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தார்.