சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சென்னை: எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தல்... கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 5ம் தேதிய வீசிய சூறைக்காற்றால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வாழை, கரும்பு, பலா உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்த ஆய்வுக்குச் சென்ற வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விரக்தியில் பேசிய விவசாயியை மிரட்டிய நிகழ்வு அப்பகுதி விவசாயிகளை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கி உள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் முருங்கை மரங்கள் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறையினர் மூலமாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.