அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு... ஜூன் மாதம் பயணமாகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி... அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் 3வது வாரத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 25 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் பயண தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிக்கிறார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

குவாட் உச்சி மாநாடு மே மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் ஜோ பைடனும் சந்திக்க உள்ளனர்.

ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்றது. இதன்படி ஜி-20 உச்சி மாநாடு இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அப்போதும் அதிபர் பைடனும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச உள்ளனர்.

தற்போது ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா இருப்பதால், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ராஜாங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், உக்ரைனில் நடக்கும் போர் குறித்து இரு தலைவர்களும் எதிர்வரும் மாதங்களில் கலந்துரையாட உள்ளனர். வெளியுறவுத் துறை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.