தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த உத்தரபிரதேச அரசு

லக்னோ: தொடர் மழையால் உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி சாலைகளில் ஓடுகின்றன. மேலும் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் நேற்று பெய்த தொடர் கனமழையால் நொய்டாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மதரஸா கல்வி வாரியம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சமஸ்கிருதம் கற்பிக்கும் பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

அதன்படி, லக்னோ, நொய்டா, காசியாபாத், கான்பூர், ஆக்ரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.