விடிய விடிய மழை ....வரதமாநதி அணை 4-வது முறையாக நிரம்பியது

சென்னை: பழநி, கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாகவே மழை பெய்து கொண்டு வருகிறது. பழநியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. இதேபோன்று கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைக் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட மின்தடையால் கிராமங்கள் இருளில் மூழ்கின. தாண்டிக்குடி அருகேயுள்ள தடியன் குடிசை, கானல்காடு மலைக் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில் பழமையான மரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதையடுத்து அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக யாரும் செல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

அந்த சாலையில் நேற்று காலை 9 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. தாண்டிக்குடி போலீஸாருடன், பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்பு போக்குவரத்து தொடங்கியது. பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மலைக் கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து நேற்று காலை 8 மணி வரை கொடைக்கானல் ரோஜா பூங்கா பகுதியில் 32 மி.மீ, பிரையன்ட் பூங்கா பகுதியில் 37.4 மி.மீ, பழநியில் 10 மி.மீ. மழை பதிவானது. கொடைக்கானலில் பெய்த மழையால் பழநியில் உள்ள பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு மற்றும் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்தது. இதில் பழநி வரதமாநதி அணையில் (மொத்தம் 66.47 அடி) நீர்வரத்து உயர்ந்தது, இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று நிரம்பி வழிந்தது.