காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு அம்சங்கள்

243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அக்டோபர் 28ம்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநில பொறுப்பாளர் சக்திசின் கோகில் மற்றும் மூத்த தலைவர்கள் வெளியிட்டனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சார கட்டண தள்ளுபடி மற்றும் நீர்ப்பாசன வசதிகளை அதிகரிப்பது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை நிராகரிப்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் அதில், ஏற்கனவே உள்ள ஓய்வூதிய திட்டங்கள் தவிர, முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.800 கவுரவ ஓய்வூதியம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பொறுப்பாளர் சக்திசின் கோகில் கூறுகையில், பீகாரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பஞ்சாபில் செய்ததைப் போல தனியாக மாநில வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களை நிராகரிப்போம் என்று தெரிவித்துள்ளார்.