அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். மும்பை சைத்யபூமியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் நினைவிடத்தில் இன்று காலை முதலே ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவி வகித்த டாக்டர் அம்பேத்கர், ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இவருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, இவரது இறப்புக்குப் பின் 1990-ல் வழங்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் குறித்த நினைவுகளை அவரது புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர். டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரை நினைவுகூர்ந்து டுவிட்டர் வாயிலாக மரியாதை செலுத்தி உள்ளார்.

டாக்டர் அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் மக்களுக்கு தொடர்ந்து வலிமையைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கதில் குறிப்பிட்டுள்ளார்.