வைகை அணை இன்னும் ஓரிரு நாளில் முழுகொள்ளளவை எட்டும்

கூடலூர்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் உள்ள இந்த அணைக்கு பெரியாறு அணை, போடி கொட்டக்குடிஆறு, தேனி முல்லையாறு, வைகை ஆறுகள் மூலம் தண்ணீர் கிடைத்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து கடந்த 1 வாரத்திற்கு மேலாக முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த 2-ந்தேதி அணையின் நீர்மட்டம் 62.50 அடியாக இருந்தபோது மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் முதல்போக சாகுபடிக்கு கால்வாய் வழியாக விநாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 52.59 அடியாக குறைந்தது. அதன்பிறகு தேனி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. மேலும் முல்லைபெரியாறு அணையிலிருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த 21-ந்தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதை அடுத்து இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2288 கனஅடி நீர் வருகிறது. திறப்பு 69 கனஅடி, இருப்பு 4854 மி.கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டும் போது முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 70 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

மேலும் தற்போது அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாளில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.