பெல்ஜியம் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவால் கொரோனா பரவியதா?

18 பேர் பலி... முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம் பரவிய கொரோனா தொற்றால் 18 பேர் பலியாகியுள்ளனர்.

பெல்ஜியம் நாட்டின் மோல் நகரில் ஹெமெல்ரிஜ்க் பராமரிப்பு இல்லம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு முதியவர்கள் அதிகளவில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் இந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் 121 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று 5 பேர் இறந்துள்ளனர். இந்த பராமரிப்பு இல்லத்தில் ஒரே மாதத்தில் இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கொரோனா பரவியது எப்படி என்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தததில் அதிர்ச்சியான தகவல் வெளியானது. டிசம்பர் மாத தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா இந்த இல்லத்திற்கு வருகை தந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருடன் இல்லத்தில் தங்கியிருந்தவர்கள் குரூப் போட்டோ எடுத்துள்ளனர். இதையடுத்து, சாண்டா கிளாஸ் மூலம் பராமரிப்பு இல்லத்தில் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகமடைந்த அதிகாரிகள், சாண்டா கிளாஸ் வேடமணிந்த நபரை தேடிப்பிடித்து விசாரித்தனர்.

இதில் தனக்கு கேரல்ஸ் ரவுண்ட்ஸ் சென்றிருந்த சமயத்தில் சில அறிகுறிகள் இருந்ததாகவும் ஆனால் அது கொரோனாவுக்கான அறிகுறிகள் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறினார். பரமாரிப்பு இல்லத்தில் உள்ள மற்றவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.